Thursday, May 7, 2009

கட்டிப் போட்டு காதல் செய்கிறாய்

கவிதை கவிதை என
உன்னைப் படுத்தியதில்
நீ வாங்கி கொடுத்த
பாரதியார் கவிதைகள்
படிக்கப்படாமலே இருக்கிறது
உன்னால் படிக்கப்படாத என்னைப் போலவே

ஒரே ஒரு கவிதை
எழுதி தா என்றேன்
வெறும் நிமிட செலவில்
நீ எழுதியது
நம்முடைய இணைந்த பெயர்கள்

'எனக்காக என்ன தருவாய் '
ஆவலாய் கேட்டு நின்றேன்
அலட்சியமாய் ஒன்றும் இல்லை என்றாய்
சோர்ந்து போய் குனிகையில்
''நானே நீ தானே
நமக்குள் ஏது பாகப்பிரிவினை'
என காதல் செய்கிறாய் நீ

உன்னை ரசிக்கிறேன்

உனக்கும் எனக்கும்தான்
எத்தனை முரண்பாடுகள்
ஆனாலும்
உனை விட்டு விலக மட்டும்
காரணம் கிடைத்ததே இல்லை


எப்போதாவது நீ
கோபத்தில் பேசாதிருந்தால்
அன்று மட்டும்
உலகமே நின்று விடுகிறது எனக்கு


இரு இரு என்று
இருட்டும் வரை பேசிவிட்டு
வீடு வரை போவாயா என
பத்தாயிரம் தடவை நீ கேட்பதில்
தெரியும் தவிப்பில்
இருக்கிறது காதல்!

வேண்டாம் வேண்டாம் என்றே
பேசிய பொழுதுகள்
புலர்வது தெரியாமல்
முடிந்த இரவுகள்
அறிந்த காதலை
நாம் ஒத்துக் கொண்டதே இல்லை


கேலி பேசிய காவலருக்கும்
மாமா என கட்டிக் கொண்ட
பக்கத்து வீட்டு சிறுமிக்கும்
நீ எனக்கு யார் என்று
தெரிந்திருந்ததை புரிந்துகொள்ள
நாட்கள் தேவைப்பட்டன எனக்கு

உன்னை ரசிக்கிறேன்

நீ குழந்தையாகிறாய் அடிக்கடி
அங்கே நில்
அதை செய்யாதே
பேசாது வா
கண்டிப்புகளுடன் நான்


எத்தனை முறை
கோபித்தாலும்
அத்தனை முறை
நெருக்கமாகிறாய் நீ


எவ்வளவு சொன்னாலும்
அடம்பிடிக்கும் குழந்தையாவே
சாதித்துக் கொள்கிறாய் நீ
உன்னை கண்டித்தே
தளர்ந்து போகிறேன் நான்

உன்னை ரசிக்கிறேன்

திரும்பிப் பார்த்தால்
திரும்பி வருவேன்
திரும்ப திரும்ப அடம் செய்கிறாய் நீ
திரும்பிப் பார்க்காமலே
கூட வர மாட்டாயோ


மனம் கேட்கிறது
போ போ என்று துரத்தும் போதெல்லாம்
போகாமல் சிணுங்குகிறாய்
மீசை வைத்த குழந்தயாய்
அள்ளி அணைக்க கைகள் பறந்தாலும்
அரக்கியாகவே துரத்துகிறேன் உனை


பேசி முடித்த பின்னும்
மறந்துட்டேன் என நீ
அழைத்துப் பேசும் எதுவுமே
புதிதாக இல்லாத போதும்
தவிர்க்க முனைந்ததில்லை நான்


நடு நிசியில் ஆரம்பிக்கும்
காலை வணக்கம்
பகல் பன்னிரண்டிலும்
முடியாது தொடர்வது
உன்னால் மட்டுமே முடிகிறது

உன்னோடு வாழத்தானே உயிர் வாழ்கிறேன்

உன்னைப்பற்றி எழுதவென
வார்த்தைகள் தேடினேன்
மெல்லமாய் அருகில் வருகிறாய்


தள்ளிப்போ என சொல்லி
எழுதுகோல்களை நகர்த்தினால்
கைகளை பற்றிக் கொள்கிறாய்


அதிகமாய் எழுதாதே
கண்படும் என்கிறாய்
"கண்பட்டதால் தானே காதல்"
சொல்லி சிரிக்கிறேன்


எதற்கு இந்த கிறுக்கல்
கேட்டு பேனாவை பறிக்கிறாய்
நீ எனக்கு மட்டும்
ஒப்பந்தம் இது என்றேன்


அடிமை சாசனம் தருகிறேன் என்று
அர்த்தமாய் அருகில் வருகிறாய்
விழிகளில் விழுங்கிக்கொண்டாய்
வெறுமையாய் கடதாசி காற்றில்!

தேடல்

காலை விடிகிறதோ இல்லையோ
என்னுடைய தேடல் தொடங்கி விடுகிறது
ஒவ்வொரு முகாம்களிலும்
ரத்த வாசனையுடன் முடிகிறது தேடல்

கையில் பத்திரிக்கை ஆதாரம்
பெயர் சொல்லி தேடவும் ஆளில்லை
அநாதையாய் விடப்பட்ட மக்களுக்கு
ஆதரவுக்கு புன்னகைக்காது தொடரும் என் தேடல்

மருத்துவமனை வந்தும்
நீ காலில்லாமலோ கையில்லாமலோ
உயிர் கொண்டாவது இருப்பாய் என
தேடிக் கொண்டே தொடர்கிறது தேடல்

ஏன் என்ன ஏது என்ற கேள்விக்கெல்லாம்
பதில் தேடி சொல்லி சென்றால்
வெறும் கொடூரப் பார்வையின்
தொடர்தலில் முடிகிறது தேடல்

காயம் கொண்ட குழந்தையும்
எதையோ இழந்த பெண்ணின் பார்வையும்
என்னில் எதையோ எதிர்பார்ப்பது
புரிந்தும் அகற்றிவிட்டு செல்கிறது என் தேடல்

பத்திரிக்கையில் வந்தது பொய்யோ
நீ வந்த சேதி நான் கண்ட கனவோ
முகாம் வாசலில் மண்டியிட்டு
கதறிக் கொண்டே இருக்கிறது என் தேடல்

வன்னி விட்டு வந்தோர் பெயரில்
உன் பெயர் இருக்கவே கண்ட உற்சாகம்
நீரடித்த கோலமாய் விலகிப் போய்விட
தேடிக் கொண்டே இருக்கிறேன் பிணவறையிலும்

Tuesday, December 23, 2008

முதல் காதல்


மெல்ல தவழ்ந்து வரும்
தென்றல் போல
மனதை வருடிச் செல்லும்
புயலாய் மாறி சில நேரம்
சிதிலமும் செய்யும்

மலரிலும் அழகாய்
முட்கள் தோன்றும்
தேனிலும் அதிகமாய்
பாகற்காய் இனிக்கும்

பேசும் வார்த்தைகள்
மறந்து போக
பேசாத வார்த்தைக்காய்
மனம் தந்தி அடிக்கும்

அமாவாசை இருட்டிலும்
பௌர்ணமி தோன்றும்
வானவில்லும் உடலில்
ஆடையாக மாறிப் போகும்

பெண்ணுக்குள் வெட்கம்
மெல்லவே எட்டிப் பார்க்கும்
கன்னம் ரோஜாவாய்
சிறகுகள் முளைக்கும் முதல் காதல்..