Monday, June 29, 2009

திருமணம்

நான் உன்னோடு சப்த பதம் கடந்து
அடி வைத்து விட்டேன்!
நாம் பார்த்த நட்சத்திரங்கள்
அருந்ததிகளின் கூட்டாக இருக்கும்!
ஆழியில் விழுந்து குளித்தவர்கள் நாம்
கணையாழிதான் இல்லை!
வாடா மல்லிகையும் கடதாசிப்பூவும்
இயற்கை தந்த மாலையாய் இருந்தது!
ஓராயிரம் முறை சேர்த்து எழுத்தப்பட்டிருக்கும்
நம் பெயர்கள்!
உன் விரல் கோர்த்து நடந்த போது
காதல் அக்கினி வளர்த்துக் கொண்டிருந்தது!
காற்றும் நீரும் நிலமும் ஆசீர்வதித்தன!
மந்திரம் ஓதி முடித்திருந்தது இடியோசை !
புகைப்படம் எடுத்தது மின்னல்!
இனிதே நிறைவேறியது
நம் இருமனங்களின் சங்கமம்!

யாதுமாகினாய் நீ

பட்டாம் பூச்சியின் அழகில்
மலர்களின் மென்மையில்
கடலின் அலையில்
வானவில்லை வர்ணத்தில்
காலம் போயிருக்கும்
உனை காணாதிருந்திருந்தால்!
வார்த்தைகள் கூட்டி
தமிழின் நளினம் காட்டினாய் நீ!
வேதனைகள் பழகிக் கொள்ள
என் துன்பமாய் வந்தாய் நீ!
இரவின் இருட்டில் விழிகள் பழக
ஓளியற்ற வழியாகினாய் நீ!
என் முரட்டுப் பிடிவாதம்
வரட்டு கௌரவம் அழித்தாய் நீ!
தவிப்புகளை தனியனாக்கினாய்!
இன்பங்களை மாறிலியாக்கினாய்!!
என் பந்தங்களை உனக்காக்கினாய்!
இறுதியில் நானே நீயாகினாய்!
யாதும் ஆகினாய் நீ நானாகி!