Wednesday, October 5, 2011

தேவதைகள்....2

வீசப்படும் மலர்களிடையே

கண் திறந்து பார்க்கிறாள் தேவி.

செல்ல நடை தேவதைகள்

கொலுசின் ஒலி நகைக்க வைக்கின்றன

தூக்கம் வருது என

தோள் சாய்கிறது குழந்தை

முகம் வாடி மீண்டும்

கல்லாகினாள் தேவி!

-------------

அரிச்சுவடி வைத்திருந்தாள் அவள்

இது ஆனா

இது ஆவனா

ஒவ்வொன்றாய் சொல்லி வந்தவள்

பாதியில் மறந்துட்டேன் என்றாள்

விடுபட்ட எழுத்துக்கள்

தலை குனிந்து வெளியேறின!

-----------------------------

வாணி விழா

சின்ன பாதங்களில்

சலங்கை கட்டி

பெரிய கண்ணில் மையிட்டு

தா தெய் தித் தெய் என

கண்ணனை அழைக்கின்றாள்

எம்மையும் அழைப்பாள் என

மற்ற தெய்வங்கள்

நிற்கின்றன வரிசையில்!


Tuesday, October 4, 2011

தேவதைகள்


தேவதைகள்

சின்ன சின்ன பாவாடைகள்
பட்டு வண்ண சட்டைகள்
குடை குடையாய் சிமிக்கிகள்
குட்டி கரும் நிலவாய் பொட்டு
வண்ண வண்ண முத்து மாலை
ஜல் ஜல் சத்தமிடும் வளையல்கள்
கொஞ்சிக் கதை பேசும் கொலுசுகள்
எங்கும் நிறைந்திருக்கும் புன்னகைகள்!
இது தேவிகள் விழா இல்லை,
குட்டி குட்டி தேவதைகள் திருவிழா!

-----------------

சுட்டு விரல் மடித்து
கட்டை விரல் சேர்த்து
சிறு கை குவித்து
தத்தா கரம் பிடித்து
அரிசியில் எழுதுகையில்
ஒவ்வொரு முறையும்
வித்யாரம்பிக்கிறது தமிழ்!

-------------------------

பாவாடை கட்டணுமாம்
பூ வைக்கணுமாம்
சிமிக்கி போடணுமாம்
இந்த வளையல் தான் வேணுமாம்
தேவதைகள் தயாராகின்றன
தெய்வத்தின் தரிசனத்திற்காய்!

--------------------

ஒருவர் மந்திரம் சொல்ல
சிலர் மலர்கள் தூவ
இமை அசைக்காது ரசிக்கிறாள் தேவி
பட்டுப் பாவாடைகளில்
குட்டி தேவதைகளை!

--------------

பொங்கல், கடலை
அவல், வடை
மோட்சம் பெறுகின்றன
குட்டி இதழ்களில்
சுவைக்கப்பட்டு!

--------

நான் லக்ஷ்மி,
நீ சரஸ்வதி,
அவள் துர்க்கை
தமக்குள் பிரித்துக் கொள்கின்றனர்.
என்னை யார் எடுப்பார்கள் ?
ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றன
தெய்வங்கள்!

Wednesday, August 26, 2009

நாளை உலகம் அழியுமாம்

கால்கள் நடை
போட்டனநாம் கைகோர்த்து
காதல் பயணம் செய்த பாதைகளில்!
நீ பறித்து அணிவித்த
போகன்விலா மலர்
அதிக அழகாய் இருந்தது இன்று!
கடல் அலைகளின்
காதல் முயற்சி
ஜெயிக்குமெனஉள்ளம் சொல்கிறது இன்று!
நீ கட்டிய மணல் மாளிகையில்
மகாராணியாய் நானும்
காவலனாய் நீயும் காதல் செய்கிறோம் இன்றும்!
உன் தோளில் கை பத்தித்து
தாண்டிய தண்ட வாளங்களில்
தடுக்கி விழாமல் நடக்கிறேன் உன் நினைவில்!
ரயில் சில்லுகளின் நசுக்கி
நீ செய்த நாணய மோதிரம்
விரலினை அழுத்தியது உன் நினைவு போல!
உன்னோடு சண்டை போட்டு
உண்டது தொண்டையில் சிக்கியது
யாரோ கடித்து வீசிய சோளம் கண்ட போது!
வீசும் தென்றல் கூட
உன் சுவாசத்தைகொண்டு வந்தது
கத கதப்பாய்!
உன்னோடு நான் இருந்த
அத்தனை நொடிகளையும் கோர்த்து
மாலை செய்கிறேன்!
நாளைக்குள் நீ வருவாய்
நினைவு மாலை சூட்டியே
உனை மூர்ச்சையாக்குவேன்!
நாளை உலகம் அழியுமாம்
அழியட்டுமே எனக்கென்னநாம் தான்
யுகம் கடந்து வாழ்வோமே காதலுடன்!

பெண் குழந்தை


தலை சுற்றியது
வாந்தி உயிர் எடுத்தது
கருதான் என்று முடிவானதும்
வலிகளை ஏற்க துணிந்தது உடல்
கண் இப்படி மூக்கு இப்படி
சிரிப்பு இப்படி என
பிஞ்சினை நெஞ்சில் நிறுத்தியது
உருவம் இல்லாத குழந்தை
ரோஸ் நிற உடையும்
தழுவல் நடையும்
கொஞ்சும் சிரிப்பும்
கொலுசுக் கால்களும்
பெண் குழந்தையே கனவில்
ஆசையாய் காத்திருந்து
வலிகளைப் பொறுத்து
தேவதையைக் கையில் வாங்கியதும்
வலி மறைந்தது அதன் அழகில்
பெண்தானா உனக்கும்
நமக்குத்தான் கொடுப்பினையே இல்லை
அம்மா சொன்ன போது
வலி அப்போது தெரிந்து
என் பிறப்புக்காய்!

தேவை

வக்கணையாய் பேசுகிறார்
வேளாண்மைக்கு ஆலோசனையும்
மீள இருப்புக்கு உத்தர வாதமும்!
கலையா உடை உடுத்தி
குளிர்க் காற்றும் வாங்கி
மக்கள் நலம் பேசுகிறார்களாம்!
அரை டம்ளர் தண்ணிக்கு
முழு நாள் காத்திருக்கும்
அந்த மனிதருக்கு வசந்தம் எங்கே?
நோய் முற்றினாலும்
ஆங்கே நாதியில்லை
அமரர் ஊர்தியில் இடமும் இல்லை!
கொடுத்த பால் நிறையும் முன்னே
பின் புறத்தில் ஈரம் காட்டும்
பச்சைக் குழந்தைக்கு என்ன வழி?
வானம் பொத்துக் கொண்டால்
தறப்பால் தாங்குமா
உடலை அணையாக்கும் நிலை மாறுமா?
உச்சி வெயில் வேளையில்
பதிய வரச்சொல்லி
மல்லிகள் அழகு பார்ப்பது தீருமா?
உப்பும் உரைப்பும் இல்லா
வெறும் பச்சைத் தண்ணி குடித்து
எத்தனை காலம் உயிர் தாங்கும்?
வசந்தம் வருமாம்
பாதை போடுதலாம்
நீர்ப்பாசனமாம் ரயில் பாதையாம்!
புதிய நிர்மானமாம்
விவசாய விருத்தியாம்
இன்னும் அபிவிருத்தியாம் அங்கு!
எதுவும் வேண்டாம்
உடனே தேவை சுடுகாடு
மொத்தமாய் எம்மை புதைத்துவிடு!

Wednesday, July 1, 2009

ஆனால் நீ

ஒற்றை ரோஜாவுடன்
கால் கடுக்க காத்திருக்கவில்லை நீ!
காத தூரம் போக
கெஞ்சி கொஞ்சியதில்லை நீ!
காலில் முள்படும் என்று
பாதையை திட்டியவனில்லை நீ!
பாதி குளிர்களியை
பறித்து உண்டதில்லை நீ!
விடிய விடிய குறுந்தகவல்
அனுப்பவில்லை நீ!
வேலை நேரத்தில் ஒன்றே ஒன்று என
முத்த சத்தம் கோரியதில்லை நீ!

ஆனால்

கண்களில் கண்ணீர் கண்டு
கைக்குட்டையானது உன் விரல்கள்!
துயரம் வரும் போது
சாய்ந்து கொள்ள தந்தாய் உன் தோள்!
தனிமையில் துவண்ட போது
கோர்த்துக் கொண்டது உன் கைகள்!
பரீட்சை நேரத்து கட்டாய உறக்கமும்
விடிகாலை விழிப்பும் உன் அழைப்பில்!
நோய் கண்ட போது
மருந்தாய் இருந்தது உன் பார்வை!

Monday, June 29, 2009

திருமணம்

நான் உன்னோடு சப்த பதம் கடந்து
அடி வைத்து விட்டேன்!
நாம் பார்த்த நட்சத்திரங்கள்
அருந்ததிகளின் கூட்டாக இருக்கும்!
ஆழியில் விழுந்து குளித்தவர்கள் நாம்
கணையாழிதான் இல்லை!
வாடா மல்லிகையும் கடதாசிப்பூவும்
இயற்கை தந்த மாலையாய் இருந்தது!
ஓராயிரம் முறை சேர்த்து எழுத்தப்பட்டிருக்கும்
நம் பெயர்கள்!
உன் விரல் கோர்த்து நடந்த போது
காதல் அக்கினி வளர்த்துக் கொண்டிருந்தது!
காற்றும் நீரும் நிலமும் ஆசீர்வதித்தன!
மந்திரம் ஓதி முடித்திருந்தது இடியோசை !
புகைப்படம் எடுத்தது மின்னல்!
இனிதே நிறைவேறியது
நம் இருமனங்களின் சங்கமம்!